உள்ளும் செல்லும்,
வெளியும் செல்லும்,
உள்சென்று வெளிவரலாம்,
பின்சென்று முன்வரலாம்.
முடியா முடிச்சு.
வரிகளில் அசை இருக்கலாம்.
வரிகளில் இசை இருக்கலாம்.
வரிகளில் அசைவிருக்குமா?
வரிகளில் அசைவிருக்குமா?
வரிகளால் அசைவிருக்குமா?
வரிகளே அசைவியக்கமா?
வரிகளும் உயிர்களா?
உயிர்களும் வரிகளா?
இயக்கமே இயங்குமா?
இயக்கம்
காற்றெழுப்பும் ஒலி அலைகள் கண்டேன் - அண்ணே
கடலெழுப்பும் நீர் திரள்கள் தானே?
நதியெழுப்பும் மலை வழிகள் கண்டேன் - தம்பீ
நிலமெழுப்பும் உயிர் துளிகள் தானே?
உளமெழுப்பும் உணர்விசைகள் கண்டேன் - அண்ணே
உணர்வெழுப்பும் பெருமியக்கம் தானே?
——
உணர்வெழுப்பும் உளத்துளிகள் கண்டேன் - தம்பீ
உயிரெழுப்பும் நில வழிகள் தானே?
மலையெழுப்பும் நதி திரள்கள் கண்டேன் - அண்ணே
நீரெழுப்பும் கடல் அலைகள் தானே!
கடலெழுப்பும் காற்றினிசை கண்டேன் - தம்பீ
காற்றெழுப்பும் பெருமியக்கம் தானே?
——
ஒலி அலைகள் காற்றெழுப்பும் நாளும் - அண்ணே
நீர் திரள்கள் கடலெழுப்பும் பாரும்!
மலை வழிகள் நதியெழுப்பும் நாளும் - தம்பீ
உயிர் துளிகள் நிலமெழுப்பும் பாராய்!
உணர்விசைகள் உளமெழுப்பும் நாளும் - அண்ணே
உளத்துளிகள் பெருமியக்கம் பாரும்!
——
உளத்துளிகள் உணர்வெழுப்பும் பாராய் - தம்பீ
நிலவழிகள் உயிரெழுப்பும் நாளும்!
நதி திரள்கள் மலையெழுப்பும் பாரும் - அண்ணே
கடல் அலைகள் நீரெழுப்பும் நாளும்!
காற்றினொலி கடலெழுப்பும் பாராய் - தம்பீ
கடலிசைக்கும் பெருமியக்கம் நாளும்!